மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் ஜனன தினமும் “கதை சொல்லும் திருவிழாவும்”


மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் ஜனன தினமும் “கதை சொல்லும் திருவிழாவும்”

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் 28/03/2019 அன்று மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் ஜனன தினமும் கதை சொல்லும் திருவிழாவும் நிறுவகத்தின் இராசதுரை அரங்கிலே வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாஸ்டர் சிவலிங்கம் என அழைக்கப்படும் இரத்தினம் சிவலிங்கம் அவர்கள் மட்டக்களப்பு “மஞ்சந்தொடுவாய்” எனும் இடத்தில் பிறந்தார். 1933/03/28ம் திகதி பிறந்த இவர் கவிதை, சிறுவர் கதை, சிறுவர் பாடல்கள், வில்லுப்பாட்டு, நகைச்சுவைப்பேச்சு, நாடகம் என பல துறைகளில் பாண்டித்தியம் பெற்றதோடு பயங்கர இரவு, அன்புதந்த பரிசு, உறைபனித்தாத்தா, சிறுவர்கதைமலர் போன்ற நூல்களையும் இவர் வெளியிட்டுள்ளார். வடகிழக்கு மாகாண சபையின் சிறுவர் இலக்கியத்திற்கான சாகித்திய மண்டல பரிசினையும் மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருதையும் இவர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவற்றுடன் நகைச்சுவைக் குமரன், வில்லிசைச் செல்வன், அருட்கலைத்திலகம், கலாபூசணம், கலைக்குரிசில், சிறுவர் இலக்கியச் செம்மல் ஆகிய பல பட்டங்களையும் பெற்றுள்ளார்.

நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களின் தலைமையில் மொழிக்கற்கைத் துறையினரால் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாஸ்டர் சிவலிங்கமும் அவருடைய பாரியாரும் கலந்து சிறப்பித்தனர். காலை 10 மணியளவில் மங்களவிளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய விழாவில் வரவேற்புரையினை திரு.அ.செபராஜா அவர்களும், மாஸ்டர் சிவலிங்கம் பற்றிய அறிமுக உரையினை திரு.க.மோகனதாசன் அவர்களும் ஈழத்து சிறுவர் இலக்கிய ஆளுமையும் சிறந்த கதை சொல்லியும் “மாஸ்டர் சிவலிங்கம்” எனும் தலைப்பில் உரையினை திருமதி.வானதி பகீரதன் அவர்களும் வழங்கினர். அத்துடன் மாஸ்டர் சிவலிங்கம் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நிறுவக பணிப்பாளர் மற்றும் மொழிக்கற்கைகள் அலகின் இணைப்பாளர்; ஆகியோரால் வழங்கப்பட்டது. “ஓவியம் பேசும் கதை” எனும் தலைப்பில் செல்வி. வினோஜா அவர்களும் மலையக நாட்டார் பாடல் கூறும் கதைகள் பற்றி இரண்டாம் வருட நாடகத்துறை மாணவர்களும் “பல்லின சமூகத்தின் கதை கூறல்” எனப் பல நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன. அத்துடன் மாஸ்டர் சிவலிங்கம் பற்றிய ஆவணப்படம் திரையிடலும் இடம்பெற்றது. நிகழ்வில் இறுதியாக நன்றியுரையினை செல்வி தர்சினி அவர்கள் வழங்கினார்.
இந் நிகழ்வானது தமிழ் மக்களது கலைப்பெறுமானத்தையும் அதனூடான பண்பாட்டுத்தொடர்ச்சியையும் தற்கால சமுகத்துக்கு உணர்த்துவதாக அமைவதோடு, கதை கூறல் பண்பாட்டினை வளர்தெடுத்து அதனை பாதுகாக்க வேண்டியதன் தேவைப்பாட்டையும் இளந்தலைமுறையினர் மத்தியில் ஊக்குவிக்கும் முகமாக ஒவ்வொரு வருடத்திலும் “மாஸ்டர் சிவலிங்கம்” அவர்களின் பிறந்த தினத்தை கதை கூறும் திருவிழாவாக கொண்டாடும் வகையிலும் இவ் விழா அமைந்திருந்தது.