Music

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்

கிழக்குப் பல்கலைக்கழகம்இலங்கை

பல்கலைக்கழக அனுமதிகள் – கல்வி ஆண்டு 2020/2021

நுண்கலைமாணி (கர்நாடக சங்கீதம்) பட்டப்படிப்பிற்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான செய்முறைத் திறன்காண் பரீட்சை

இசைத்துறையில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான வாய்ப்பாட்டுச் செயன்முறையானது, இரு கட்டங்களாக நடாத்தப்படவுள்ளது. முதற்கட்டமானது பரீட்சார்த்திகளினால் அனுப்பப்படுகின்ற காணொளிப் பதிவுக்கான புள்ளி வழங்குதலினை அடிப்படையாகக் கொண்டதாகவும் இரண்டாம் கட்டமானது பரீட்சார்த்திகளினது நேர்முகத் தேர்வுக்கான புள்ளி வழங்குதலினை அடிப்படையாகக் கொண்டதாகவும் அமையவிருக்கின்றது.

·         இசைக் கருவிகளுக்கான பரீட்சை இம்முறை நடாத்தப்படமாட்டாது.

முதற்கட்டம்

இப் பகுதியானது பரீட்சார்த்திகளினால் அனுப்பப்படுகின்ற காணொளிப்பதிவாக இருக்கும் (Video). இக்காணொளியினைப் பதிவேற்றம் செய்வதற்கான இறுதித் திகதி 05/07/2021. தங்களது காணொளியினைப் பதிவேற்றம் செய்வதற்கு இறுதியாக கொடுக்கப்பட்டுள்ள Link ஐ Click செய்யவும்.

இக்காணொளியில் அடங்கியிருக்க வேண்டிய விடயங்கள்:

உருப்படி : தானவர்ணம்

தமக்குப் பொருத்தமான சுருதியில் பரிச்சயமான தான வர்ணம் ஒன்றினை முறைப்படி முழுமையாக (பூர்வாங்கம், உத்தராங்கம்) இரு காலங்களிலும் பாடி ஒலி-ஒளிப்பதிவு செய்யப்பட வேண்டும். தயார் செய்யப்பட்ட வர்ணத்தினைப் பாட ஆரம்பிக்கும் முன்னர்,

1.      வர்ணத்தின் இராகம், தாளம் என்பன குறிப்பிட்டு அமைக்கப்பட்ட இராகத்தின் ஆரோகணம் – அவரோகணத்தினைப் பாடிய பின்னரே வர்ணத்தினைப் பாட ஆரம்பிக்க வேண்டும். 

2.      பரீட்சார்த்தி பொருத்தமான கலாசார உடையுடன் (ஆண்கள் – வேட்டி, பெண்கள் – சேலை) நிலத்தில் அமர்ந்தபடி தோற்றமளிப்பதோடு, தாளம் போடுகின்ற நிலையினைப் பரீட்சகர்கள் அவதானிக்கும் வகையில் ஒளிப்பதிவு (Video) செய்யப்பட வேண்டும். பரீட்சார்த்தியின் நிலையானது (Position) அவர்களினது அடையாளத்தினை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் அமைதல் அவசியம் ஆகும்.

காணொளியினைப் பதிவு செய்யும்போது கருத்தில் கொள்ள வேண்டிய அறிவுத்தல்கள்:

1.      பதிவு செய்யப்படுகின்ற பாடல் ஆரம்பம் முதல் இறுதிவரை இடை நிறுத்தப்படாமலும் திருத்தம் செய்யப்படாமலும் (Do not edit) அமைதல் அவசியம் ஆகும்.

2.      சுருதி வாத்தியம் தவிர வேறு எந்தவொரு பக்கவாத்தியங்களும் பயன்படுத்தப்படலாகாது.

பதிவேற்றம் செய்வதற்கான மாதிரிக் காணொளியின் Link இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.

 Click Here

இரண்டாம் கட்டம்

இப் பகுதியானது பரீட்சார்த்திகள் மெய்நிகர் (Zoom) வழியாக இணைந்து பரீட்சகரினால் கேட்கப்படும் வினாக்களுக்கு செயன்முறை, வாய்மொழி மூலமாகப் பதிலளிப்பதாக அமையும்.

மெய்நிகர் (Zoom) பரீட்சையின்போது கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள்: 

1.      பரீட்சார்த்திகள் தயார் செய்ய வேண்டிய செயன்முறைக்கான உருப்படிகள் :

(அ) அலங்காரம் :

கீழ்க்குறிப்பிடும் அலங்காரங்களுள் பரீட்சகரால் கேட்கப்படும் அலங்காரம் ஒன்றினை குறித்த இராகத்தில் மூன்று காலங்களிலும் பாடிக் காட்டுதல் வேண்டும்.

1.      மட்டியதாளம் – கீரவாணி இராகம்

2.      ஏகதாளம் – ஆபோகி இராகம்

3.      ஜம்பைதாளம் – சண்முகப்பிரியா இராகம்

4.      ரூபகதாளம் – மோகன இராகம்

5.      திரிபுடைதாளம் – சங்கராபரண இராகம்

(ஆ) கீர்த்தனை :

1.      தமக்கு மிகவும் பரிச்சயமான மத்திமகாலக் கீர்த்தனை ஒன்றினைப் பொருத்தமான சுருதியில் பாடிக் காட்டவேண்டும்.

2.      தாம் பாடும் கீர்த்தனைக்கு இராகம் பாடிப் பொருத்தமான இடத்தில் நிரவல் செய்து, இரு காலங்களில் கற்பனாஸ்வரம் பாடிக் காட்டுதல் வேண்டும். 

(இ) அறிமுறை:

பரீட்சகரால் வினாவப்படும் அறிமுறை சார்ந்த வாய்மொழி வினாக்களுக்கு விடையளிக்கப்படல் வேண்டும்.

மெய்நிகர் (Zoom) பரீட்சையின்போது கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்கள்

1.      ஒவ்வொரு பரீட்சார்த்திக்கும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு 15 நிமிடங்கள் வழங்கப்படும்.

2.      தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு 10 நிமிடங்களுக்கு முன்பதாக மெய்நிகர் செயலிக்குள் (Zoom) உள்நுழைய வேண்டும். 

3.      பரீட்சார்த்தி பொருத்தமான கலாசார உடையுடன் (ஆண்கள் – வேட்டி, பெண்கள் – சேலை) நிலத்தில் அமர்ந்தபடி தோற்றமளிப்பதோடு, தாளம் போடுகின்ற நிலையினைப் பரீட்சகர்கள் அவதானிக்கும் வகையில் பரீட்சைக்குத் தோற்ற வேண்டும்.

4.      பரீட்சகர்களால் கேட்கப்படுகின்ற வினாக்களுக்கு மாணவர்கள் பதிலளிக்கத் தயாராயிருக்க வேண்டும். 

5.      சுருதி வாத்தியம் தவிர வேறு எந்தவொரு பக்கவாத்தியங்களும் பயன்படுத்தலாகாது.

குறிப்பு : இரண்டு கட்டங்களாக நிகழ்த்தப்படவிருக்கின்ற இப்பரீட்சையில் மாணவர்களிடமிருந்து சுருதி சுத்தம், ஸ்வரஸ்தானத் தெளிவு, இராக சுத்தம், சொற் தெளிவு, தாளசுத்தம், மனோதர்ம ஞானம், ஆற்றுகை செய்கின்ற பாங்கு மற்றும் குரல் வளம் போன்ற விடயங்கள் கருத்திற் கொள்ளப்படும்.

மாணவர்களுக்கான பொதுவான அறிவுறுத்தல்கள்

1.      குறைந்தபட்சம் மாணவர்கள் SMART கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டும். இருப்பினும் கையேட்டுக்கணனி (Tablet), கையடக்க இசைக்கேளி (IPad) இருப்பின் அவற்றில் யாதேனும் ஒன்றினைப் பயன்படுத்தலாம்.

2.      சகல மாணவர்களும் தத்தமது பாடங்களுக்குரிய செயன்முறை விளக்கக் காணொளியை நிறுவக இணையத்தளத்தில் பார்வையிட வேண்டும்.

3.      Audio, Video இணையம் என்பன தடங்கல் இல்லாத இடத்தினைத் தெரிவுசெய்து, அவ்விடம் பரீட்சைக்குப் பொருத்தமானதா என்பதை முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

4.      மாணவர்கள் அனைவரும் தங்கள் தேசிய அடையாள அட்டையுடன் தோன்றி, பரீட்சகரிடம் தங்கள் முகத்தினைத் தெளிவாகத் தெரியும் வண்ணம் காண்பிப்பதன் மூலம் தங்களினது அடையாளத்தினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

5.      கிடைத்தள நிலையில் (Land scape) பொருத்தமான பின்னணிச் சூழலில் தம்மை அடையாளப்படுத்தும் வகையில் தரப்படுகின்ற மெய்நிகர் (Zoom) இணைப்பினூடாக இணைந்து கொள்ளல் வேண்டும்.

6.      தங்களது செயன்முறையினைப் படமெடுப்பதற்கு ஒரு உதவியாளரை வைத்துக்கொள்வது விரும்பத்தக்கது. 

7.      மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஆற்றுகைகள், செயன்முறைகளை இடைவிடாது தொடர்ச்சியாக ஆற்ற வேண்டும். 

8.      மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்ட கால எல்லையினுள் தங்களது காணொளியினைப் பதிவேற்றம் செய்யவேண்டும். காணொளியினைப் பதிவேற்றம் செய்யாத மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படமாட்டார்கள்.

9.      ஒளிப்பதிவினை மேற்கொள்ளும்போது மாணவர்களது ஆற்றுகைகள் முழுமையாகப் பரீட்சகர்களினால் அவதானிக்கும் வகையில் அமைதல் அவசியமாகும்.

10.  தொழிநுட்பப் பிரச்சினைகள் ஏற்படுமிடத்து உடனடியாக sar_exam_svias@esn.ac.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது 065-2222663 / 0777883229 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.